கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தக் கூடாது:  அமைச்சர் பொன்முடி

72பார்த்தது
மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை என்பதற்காக மத்திய அரசு கல்வி நிதியை நிறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2021-22 முதல் 2024-25-ம் நிதியாண்டு வரை உயர்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் உள்ள மாநில உயர்கல்வி மன்றத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி தலைமை தாங்கினார். இதில் உயர் கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ், தொழில்நுட்ப கல்வி துறை ஆணையர் டி. ஆபிரகாம் மற்றும் பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் 1967ம் ஆண்டு முதல் இருமொழி கொள்கை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. சென்னை மாநில கல்லூரியில் இந்தி மொழி பாடத்தில் 3 பேர்தான் படிக்கிறார்கள். மலையாளத்தில் 4 பேர் படிக்கிறார்கள். உருது படிப்பில் யாருமே சேரவில்லை.

தமிழக மாணவர்கள் இருமொழி கொள்கையை தான் விரும்புகிறார்கள். மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை என்பதற்காக மத்திய அரசு நிதியை நிறுத்துவது ஏற்க முடியாதது. தமிழகம் பள்ளிக்கல்வியில் இருந்து உயர் கல்வி வரை தலைசிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. எனவே, மத்திய அரசு கல்விக்கான நிதியை நிறுத்தாமல் வழங்கி தமிழகத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி