கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் காவல்துறை ஆமை வேகத்தில் விசாரணை செய்வதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் ஏ. பி. சூரிய பிரகாசம் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி அமர்வு முன்பு இன்று(செப்.12) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், காவல்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் தனது விசாரணையை சரியாக செய்துள்ளதாக தெரிவித்தனர். அதன் அறிக்கையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை. பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயங்குகின்றனர் என கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
என்சிசி ஆசிரியர் மற்றும் சிவராமனுக்கும் என்ன தொடர்பு? எந்த அடிப்படையில் என்சிசி முகாம் நடத்த தனியார் பள்ளியில் அனுமதி வழங்கப்பட்டது? என பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.