தமிழகத்தில் கோனோகார்பஸ் மரங்களை அரசு தடை செய்வது மட்டுமின்றி, மக்கள் வாழும் பகுதிகளில் வளர்க்கப்பட்டுள்ள இந்த வகை மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பசுமைப்போர்வையை அதிகரிக்கும் நடவடிக்கை என்ற போர்வையில் கோனோகார்பஸ் (Conocarpus) என்ற வகை மரங்களை தமிழக அரசு அதிக அளவில் வளர்த்து வருகிறது.
சென்னை நீலாங்கரை கடற்கரைப் பகுதியிலும், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் சாலையோரங்கள், சாலைகளின் நடுப்பகுதிகள், பூங்காக்கள், கல்விநிறுவன வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவன வளாகங்களில் இந்த வகை மரங்கள் மிக அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கும், மனித உடல்நலத்துக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் இந்த வகை மரங்களை அரசே நடுவது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் கோனோகார்பஸ் மரங்களை அரசு தடை செய்வது மட்டுமின்றி, மக்கள் வாழும் பகுதிகளில் வளர்க்கப்பட்டுள்ள இந்த வகை மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வகை மரங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சாலையோரங்கள், பூங்காக்கள், தோட்டங்கள் போன்றவற்றில் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய மா, வேம்பு, பூவரசு, அரசு போன்ற நாட்டு மரங்களை நடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.