மோடி ஆட்சி நடப்பது கோடீஸ்வரர்களுக்கான ஆட்சியே தவிர, நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கானதாக இல்லை என்பதையே கோடீஸ்வரர்களின் சொத்து குவிப்பு விவரம் உறுதிப்படுத்துகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளிலும் ஒரு கோடீஸ்வரரை மோடி ஆட்சி உருவாக்கி சாதனை படைத்துள்ளது. 2023 இல் 259 கோடீஸ்வரர்கள் இருந்தனர். அது நடப்பாண்டில் 334 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 159 லட்சம் கோடியாக உயர்ந்து இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 50 சதவிகிதமாக உயர்ந்திருப்பதன் மூலம் மோடி ஆட்சி யாருக்காக நடக்கிறது? அதானி, அம்பானி உள்ளிட்ட கோடீஸ்வரர்களை மேலும் கோடீஸ்வரர்களாக ஆக்கி அதன்மூலம் தேர்தல் பத்திர நன்கொடையை குவித்து தேர்தல் களத்தில் சமமின்மையை உருவாக்கி, அதன்மூலம் தேர்தலில் வெற்றி பெற்றவர் தான் பிரதமர் மோடி.
மோடி ஆட்சி நடப்பது கோடீஸ்வரர்களுக்கான ஆட்சியே தவிர, நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கானதாக இல்லை என்பதையே கோடீஸ்வரர்களின் சொத்து குவிப்பு விவரம் உறுதிப்படுத்துகிறது. எனவே, மோடி ஆட்சி என்பது அப்பட்டமான ஒரு மக்கள் விரோத ஆட்சி என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொண்டு உரிய பாடத்தை உரிய நேரத்தில் நிச்சயம் வழங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.