

சென்னை: அரசு மரியாதையுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நேற்று துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் சென்னை கிண்டியை அடுத்துள்ள மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் நேற்று மாலை 4.30 மணியளவில் மணப்பாக்கத்தில் இருந்து இளங்கோவனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. முகலிவாக்கம் மின் மயானத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்வில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அவரது மறைவையொட்டி அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தமிழக பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு காங்கிரஸ் கட்சிக்கும் தமிழகத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும் என தெரிவித்துள்ளார்.