சென்னையில் கனமழை: அம்பத்தூரில் 14 செ. மீ பதிவு
சென்னையில் நேற்றிரவு திடீர் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக, கொளத்தூர், ஆர். கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். சென்னை, புறநகரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. அவ்வப்போது லேசான மழை பெய்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று காலை முதல் கடும் வெயில் வாட்டியது. பின்னர் இரவு 8. 30 மணிக்கு மேல் லேசான சாரல் மழையாக தொடங்கி, பலத்த காற்றுடன் சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் கனமழையாக கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக, கோயம்பேடு சந்தை பகுதிகள், அண்ணாநகர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர். அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இன்று காலை 8. 30 மணி வரை பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக அம்பத்தூரில் 14 செ. மீ, அண்ணாநகர் மேற்கில் 12 செ. மீ, மணலி புதுநகரில் 10 செ. மீ, கத்திவாக்கம், பெரம்பூரில் தலா 9 செ. மீ, வடபழனி, புழல், கொளத்தூரில் தலா 8 செ. மீ, மாதவரத்தில் 7 செ. மீ மழை பதிவாகியுள்ளது. நன்றி ஏஎன்ஐ