இளைஞரின் தாக்குதலால் படுகாயமடைந்த சென்னை அரசு மருத்துவர் பாலாஜி, ‘நான் நலமுடன் இருக்கிறேன். ’ என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் தன் உடல்நிலை பற்றி விவரித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரை இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாக்குதலில் பாலாஜியின் தலை, கழுத்து, முதுகு, காதின் பின்பகுதி, நெற்றி உள்ளிட்ட 7 இடங்களில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவர் பாலாஜியை இன்று காலை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அமைச்சர், எப்படி இருக்கிறீர்கள் பாலாஜி? என கேட்க, கையில் இருக்கும் உணவை உட்கொண்டு காட்டி, ‘இதோ நன்றாக இருக்கிறேன்’ என கூறியுள்ளார். மருத்துவர் பாலாஜியின் கைகளை குலுக்கி அமைச்சர் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய மருத்துவர் பாலாஜி, நான் நலமுடன் உள்ளேன். தலைக்காயங்களுக்கு தையல் போட்டுள்ளனர். ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் கொடுத்துள்ளனர். இசிஜி எடுத்துள்ளனர். இன்னும் பல பரிசோதனைகளும் செய்துள்ளனர் என்று தனது நலம் பற்றியும், தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றியும் கூறியுள்ளார்.