தமிழக அரசின் தீயணைப்புத் துறை இணை இயக்குநர் என். பிரியாவுக்கு, முதல் முறையாக மாநில அரசு அல்லாத குடிமைப்பணிகள் ஒதுக்கீட்டில் ஐஏஎஸ் அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.
தமிழக தீயணைப்புத் துறை இணை இயக்குநராக இருப்பவர் என். பிரியா ரவிச்சந்திரன். இவர் கடந்த 2012-ம் ஆண்டு சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள கல்சா மகாலில் ஏற்பட்ட தீவிபத்தின் போது, தீயணைப்பு பணிகளில் ஈடுபட்ட நிலையில், காயமடைந்தார். கடந்த 2003-ம் ஆண்டு குரூப் 1 பணிக்கு தேர்வு செய்யப்பட்ட பிரியாவுக்கு, தற்போது மாநில அரசு அல்லாத குடிமைப் பணிகள் ஒதுக்கீட்டில் மத்திய அரசு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கியுள்ளது.
மாநில அரசில் காலியாக உள்ள இடங்களின் அடிப்படையில் மத்திய அரசு ஆண்டுதோறும், குரூப் 1 அதிகாரிகளுக்கு மாநில அரசு பரிந்துரை அடிப்படையில், ஐஏஎஸ் அதிகாரிக்கான அந்தஸ்தை வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் 2022-ம் ஆண்டுக்கான ஐஏஎஸ் அதிகாரியாக பிரியா ரவிச்சந்திரனை தேர்வு செய்து, இதற்கான அறிவிப்பை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் ஐஏஎஸ் அதிகாரி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது தமிழகத்தில் இது முதல் முறையாகும்.