சம்போ செந்தில் உடன் கூட்டு வைத்துக் கொண்டு தனது மகனை போலீசார் சுட்டு கொன்றுவிட்டதாக காக்கா தோப்பு பாலாஜி தாய் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை பிணவறை முன்பு காக்கா தோப்பு பாலாஜியின் தாயார் கண்மணி கண்ணீர் மல்க பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக என் மகன் எவ்வித குற்ற சம்பவங்களிலும் ஈடுபடாமல் இருந்து வந்த நிலையில், காவல்துறையினர் வேண்டுமென்றே தன் மகனை சுட்டுக் கொன்று விட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் ஒருவரான சம்போ செந்திலை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருவதாகவும், அவரது மனைவியை கூட காவல்துறையினர் விசாரிக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் தனது மகன் பாலாஜியின் நண்பர்கள் ஆறு பேரை, சம்போ செந்தில் திட்டமிட்டு கொலை செய்துவிட்டதாகவும், தனது மகனை அவரால் கொள்ள முடியாத காரணத்தினால், காவல்துறையினரின் துணையோடு தற்போது தனது மகனை சுட்டுக்கொன்று விட்டதாக பாலாஜியின் தாயார் கண்மணி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி போன்றவற்றை தொடர்ந்து செய்து வந்த தனது மகன் பாலாஜியை, உள்நோக்கம் மற்றும் சதியின் காரணமாக காவல்துறையினர் சுட்டு கொன்றுவிட்டதாக அவரது தாயார் வேதனையோடு தெரிவித்துள்ளார்.