உத்தராகண்ட்டில் மீட்கப்பட்ட 10 பேர் சென்னை திரும்பினர்

66பார்த்தது
உத்தராகண்ட்டில் மீட்கப்பட்ட 10 பேர் சென்னை திரும்பினர்
உத்தராகண்ட் நிலச்சரிவு பகுதியில் சிக்கிய 30 ஆன்மிக சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். அதில், 10 பயணிகள் விமானம் மூலம் பாதுகாப்பாக சென்னை வந்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 18 ஆண்கள், 12 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் உத்தராகண்ட் மாநிலம் ஆதிகைலாஷ் கோயிலுக்கு கடந்த 1-ம் தேதி ஆன்மிக சுற்றுலா புறப்பட்டுச் சென்றனர். ஆதிகைலாஷ் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது, வழியில் ஆதி கைலாஷில் இருந்து 18 கி. மீ தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதையடுத்து அங்குள்ள ஒரு ஆசிரம பகுதியில் 30 பேரும் பாதுகாப்பாக தங்கினர். நிலச்சரிவால் சாலை பாதிக்கப்பட்டதால், அவர்கள் 6 நாட்கள் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். முதியவர்கள் அதிக அளவில் இருந்ததால், வானிலை சீரானதும், கடந்த 15-ம் தேதி ஹெலிகாப்டர் மூலமாக 30 பேரும் காயம் ஏதுமின்றி மீட்கப்பட்டு, 20 கிமீ தொலைவில் உள்ள தர்சூலா என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

தர்சுலாவில் இருந்து 30 பயணிகளும் 2 வேன்களில் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டனர். டெல்லியில் தமிழக அரசின் அதிகாரிகள், 30 பேரையும் வரவேற்று அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர். 20 பேர் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை வந்த 10 பேரை தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி