ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் திரு ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆகஸ்ட் 7ம் தேதி ஆடிப்பூர தேரோட்டம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஶ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு ஸ்ரீ ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் நடைபெறும் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்ட திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாருக்கு விசேஷ திருமஞ்சனம் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, காலை 9 மணிக்கு கருட கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீ சடகோபராமானுஜ ஜீயர், ராம்கோ குழும இயக்குனர் நிர்மலா ராஜூ, ராம்கோ கல்வி குழும இயக்குனர் ஶ்ரீகண்டன் ராஜா, அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, செயல் அலுவலர் லட்சுமணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.