விருதுநகர் நகராட்சி மொத்தம் 36 வார்டுகளைக் கொண்டது. இந்த நகராட்சிக்குட்பட்ட விருதுநகர் காமராஜர் புதிய பேருந்து நிலையத்தில் கடை அமைப்பது, இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கான இடம் ஒப்பந்தம் விடுவதற்கான டெண்டர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஓபன் டெண்டர் முறையில் நடைபெற்ற இந்த டென்டரில் திமுகவினர் மட்டுமே பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து டெண்டர் நடந்தது ஏன் முறையாக நகரமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்படவில்லை? ஆன்லைன் டெண்டர் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதையும் மீறி ஏன் ஓபன் டெண்டர் நடைபெற்றது என அதிமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த கவுன்சிலர்களும் தங்களுக்கு இந்த டெண்டர் குறித்து எந்தவித அறிவிப்பும் வரவில்லை எனவும், உரிய அறிவிப்பு இன்றி நடைபெற்ற இந்த டென்டரை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி நகரமன்ற உறுப்பினர் மாதவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்குப் பதிலளித்த திமுகவைச் சேர்ந்த நகரமன்ற உறுப்பினர் மாதவன், டெண்டர் நடைபெறுவது மட்டுமே தனக்குத் தெரியும், ஓபன் டெண்டரா அல்லது ஆன்லைன் டெண்டரா என்பது குறித்து தனக்கு எந்தவித தகவலும் வரவில்லை என விளக்கம் அளித்தார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.