*அருப்புக்கோட்டையில் வழக்கறிஞரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக கவுன்சிலர் மணி முருகன் கைது; நகர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை*
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எம். டி. ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன்(38). வழக்கறிஞராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பாஸ்கரன் தபால் நிலையம் அருகே நேதாஜி சாலையில் காரில் அமர்ந்திருந்த போது அங்கு வந்த மூன்று நபர்கள் பாஸ்கரன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் பாஸ்கரன் அணிந்திருந்த 10 சவரன் தங்க நகைகளையும் அவர்கள் பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த பாஸ்கரன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் முன்விரோதம் காரணமாக கவுன்சிலர் மணி முருகன் தூண்டுதலின் பேரில் குண்டு பாண்டி, அன்பு கணேஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய மூன்று பேர் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக பாஸ்கரன் தரப்பு அளித்த புகார் அடிப்படையில் நகர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் விக்னேஷ் என்பவரை கைது செய்த நிலையில் தற்போது சொக்கலிங்கபுரத்தில் தலைமறைவாக இருந்த கவுன்சிலர் மணி முருகனை நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.