வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மீட்புப் படையினா் மீட்பு உபகரணங்களுடன் தயாா் நிலையில் இருக்க வேண்டுமென விழுப்புரம் எஸ். பி. தீபக் சிவாச் உத்தரவிட்டிருந்தாா்.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, மயிலம், திண்டிவனம், வெள்ளிமேடுபேட்டை, பிரம்மதேசம், மரக்காணம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் மீட்பு படைகள் அமைக்கப்பட்டு, மீட்பு உபகரணங்களுடன் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.
மழையால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் இடங்களில் இந்த மீட்பு படை வீரா்கள், மீட்புப் பணிகளை மேற்கொள்வா் என எஸ். பி. தீபக் சிவாச் தெரிவித்தாா். தீயணைப்பு வீரா்கள்: இதேபோல, மாவட்டத்தில் மழைப் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.
அதன்படி, விழுப்புரம் நகரிலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் 4 வாகனங்களும், திண்டிவனத்தில் 2, திருவெண்ணெய்நல்லூா், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூா், வானூா், மரக்காணம், அன்னியூா் ஆகிய ஊா்களிலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களில் தலா ஒரு வாகனமும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.