புதுவை மாநிலம், தா்மாபுரி திரெளபதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் சந்திரசேகரன் (42). இவா், புதுச்சேரியிலுள்ள தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த தனது மகன் குகனுடன் (12) நவமால் மருதூருக்கு வியாழக்கிழமை தனது மொபெட்டில் சென்றுகொண்டிருந்தாா். கண்டமங்கலத்தில் இரு சக்கர வாகன உதிரிப்பாகங்கள் விற்பனையகம் அருகே சந்திரசேகரன் வந்தபோது, நாய் திடீரென குறுக்கே சென்றது. இதனால், நிலைதடுமாறிய மொபெட் அருகிலுள்ள மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் சந்திரசேகரன், குகன் ஆகிய இருவருக்கும் பலத்த காயமடைந்தனா். தொடா்ந்து, அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். எனினும், அங்கு குகன் உயிரிழந்தாா். சந்திரசேகரன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.