நாட்றம்பள்ளி அடுத்த தேர்தாண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு ஆண் பிள்ளை உள்ளனர். இவர் மூவரும் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் மின்கம்பி மீது பணியாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டு இப்பொழுது மாற்றுத்திறனாளியாக உள்ளார். வேலைக்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்.
தங்களுக்கு அரசு சார்பில் மூன்று சக்கர வாகனம் வேண்டும் என கடந்த ஆண்டிலிருந்து இதுவரை 20க்கும் மேற்பட்ட முறை மனுக்கள் கொடுத்துள்ளதாகவும், ஆனால் இதுவரை வழங்கவில்லை எனவும், இதனால் எனது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கு முடியவில்லை என வேதனையோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்திருந்தார். அதனை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்திரவல்லி அடுத்த வாரம் திங்கட்கிழமை அவருக்கு இரு சக்கர வாகனம் வழங்க வேண்டுமென அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
மேலும் ரேஷன் கார்டில் தற்பொழுது 20 கிலோ அரிசி மட்டுமே வழங்கி வருவதாகவும், அதை மாற்றி 35 கிலோ வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். அதனை தொடர்ந்து மாவட்ட வட்ட வளங்கள் அதிகாரியை அழைத்து இது குறித்து நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.