திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு மனு கொடுப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 750-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருகின்றனர். மனுகொடுக்க வரும் பொதுமக்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உட்காருவதற்கு நாற்காலிகள் போதுமான அளவுக்கு இல்லை. மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை கணினியில் பதிவு செய்வதற்கு போதுமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால் மனுவை கொடுத்து பதிவு செய்ய நீண்ட நேரம் காத்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் மனுகொடுக்க வந்திருந்தனர். கூட்டம் அதிகமானால் பொதுமக்கள் அமருவதற்கு போடப்பட்டிருந்து இருக்கைகள் முழுவதும் நிரம்பியது. கூடுதலாக நாற்காலிகள் ஏதும் கொண்டு வராத காரணத்தில் மனுகொடுக்க வந்த பெண்கள் பலர் நீண்ட நேரம் தரையில் அமர்ந்து இருந்தனர். குறைகளை தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததை யாரிடம் குறைகளை தெரிவிப்பது என தவித்தனர்.