விநாயகர் சதுர்த்தியையொட்டி வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகே விநாயகர் சிலை வைக்க அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பிரமாண்டமான 18 அடி உயர விநாயகர் சிலை சுமார் ரூ. 1. 50 லட்சம் மதிப்பில் ஆந்திராவில் இருந்து வாங்கி வந்துள்ளனர்.
பத்து அடிக்கு மேல் விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லாத நிலையில், சுமார் 18 அடி உயர சிலை வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகே ஆற்காடு சாலையில் மினி லாரியில் கொண்டு வந்த போது, நடுவழியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து விழா குழுவினர், இந்து முன்னணி நிர்வாகிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோட்டாட்சியர் கவிதா மற்றும் தாசில்தார் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளும் பாதுகாப்பு கருதி சிலை வைக்க அனுமதிக்க மறுத்தனர். அப்போது விழா குழுவினர் சிலையை பிரதிஷ்டை செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தொடர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் சிலைக்கு பூஜை செய்து உடனடியாக கரைக்க கொண்டு செல்ல வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு விழாக் குழுவினர் சம்மதம் தெரிவித்து சிலையை சைதாப்பேட்டை பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு பூஜை செய்யப்பட்டு பின்னர் சிலையை சதுப்பேரி ஏரிக்கு எடுத்துச் சென்றனர்.