சாமியாடிய பெண் தனக்கு தானே கழுத்தை அறுத்ததில் உயிரிழப்பு
வேலுார் விருபாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சவுரி முடி விற்பனை தொழிலாளி முத்துவேல், (38) இவரது மனைவி சத்யா, ( 34), சில மாதங்களுக்கு முன், இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் பழமை வாய்ந்த நல்ல தண்ணீர் குளக்கரையில், தனியாரால் பராமரிக்கப்பட்டு வரும், முத்து மாரியம்மன் கோவிலில், பேய் ஓட்டுதல், உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு மந்திரம் போடுதல் போன்றவை செய்யப்படுகின்றன. இதை கேள்விப்பட்டு இக்கோவிலிற்கு சென்றால் மனைவி குணமாகிவிடுவார் என நம்பி, முத்துவேல், தன் மனைவியை அழைத்து கொண்டு மாலை, போளூர் நல்ல தண்ணீர் குள மாரியம்மன் கோவிலிற்கு சென்றார். அப்போது, அங்கு கோவிலில் இருந்த சிலர் கோவிலை வலம் சென்று வழிபட்டு கொண்டிருந்தனர். இதை கண்ட சத்யா திடீரென சாமியாடுவது போல உணர்ச்சியுடன் ஆடினார். பின்னர், திடீரென கோவில் வளாகத்தில் எலுமிச்சை, கோழி அறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் தனக்கு தானே கழுத்தை அறுத்து கொண்டார். இதில், ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்திலேயே பலியானார். இதை கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போளூர் போலீசார் விசாரிக்கின்றனர்.