கள்ளக்குறிச்சி - Kallakurichi

பிளாஸ்டிக் பொருட்கள்: அபராதம் விதிக்க கலெக்டர் அறிவுறுத்தல்

பிளாஸ்டிக் பொருட்கள்: அபராதம் விதிக்க கலெக்டர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சியில் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை பயன்படுத்துவது தொடர்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்பு பணிக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் பிரசாந்த் பேசியதாவது: பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கையோடு இணைந்த பொருட்களை பயன்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மாவட்டத்தில் இல்லை. அவ்வாறு இருந்தால் பொதுமக்கள் அது குறித்து தகவலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தெரியப்படுத்தினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மஞ்சப்பையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கடைகள், வணிக நிறுவனங்கள் பயன்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும். இப்பணியினை மாவட்ட அளவிலான குழு தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கலெக்டர் பிரசாந்த் பேசினார். கூட்டத்தில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (பொ) புருஷோத்தமன், உதவி பொறியாளர் ராம்குமார், நகராட்சி ஆணையர்கள் கள்ளக்குறிச்சி மகேஷ்வரி, உளுந்துார்பேட்டை இளவரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


கள்ளக்குறிச்சி