
திருவண்ணாமலை: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு
திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் காந்திராஜன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், திருவண்ணாமலை மாநகராட்சியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி, வணிக வளாக கட்டடம் கட்டும் பணி, புதிய சமுதாயக் கூடம் கட்டும் பணி ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்த ஆட்சியர் க. தர்ப்பகராஜ், பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், திருவண்ணாமலை மாநகராட்சியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள், அங்கன்வாடி மையக் கட்டடப் பணிகள், தெரு விளக்குகள், கழிவுநீர்க் கால்வாய்கள், திடக்கழிவு மேலாண்மைப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த அவர், இனிவரும் காலங்களில் மாநகராட்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து வாராந்திர ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும். எனவே, வாரம்தோறும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.