திருவண்ணாமலை மாவட்டம் தண்டராமபட்டு அருகே சாத்தனூர் அணை உள்ளது. ஃபென்சல் புயல் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அணைக்கு நீர்வரத்து அதிகளவில் இருந்தது. அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் கடந்த 2-ம் தேதி அதிகாலை விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் சாத்தனூர் அணையில் சுற்றுலாப் பயணிகள் செல்லும் வழித்தடத்தில் முதலை ஒன்று நேற்று இருப்பது தெரியவந்தது. இதையறிந்த சாத்தனூர் அணை ஊழியர்கள், விரைந்து சென்று முதலையை விரட்டி அணையில் விட்டனர்.
இது சாத்தனூர் அணைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கிடையில் சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் நேற்று மீண்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஒரு மாதமாக தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிடுவது நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டது. அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதாலும், அணையின் நீர்மட்டம் 117.45 அடியை எட்டியதாலும், அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணையாற்றில் நேற்று காலை 7 மணிக்கு விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு, பிற்பகல் 3 மணிக்கு விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.