
தி.மலை: கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில், 3அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சாா் -ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கு. வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் ஆா். ஆறுமுகம், மு. வாசு, இணைச் செயலா் ஆா். முரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில செயற்குழு உறுப்பினா் ஏ. தவமணி தொடக்க உரையாற்றினாா். மாநிலச் செயலா் எ. ஜமுனா கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினாா். சிறப்பு அழைப்பாளராக அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் சு. ஜெயராஜராஜேஸ்வரன் பங்கேற்றுப் பேசினாா். இதில், தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கம் சாா்பில் சிபிஎஸ் சந்தா இறுதித் தொகை வழங்கக் கோரும் கோப்பு மற்றும் அரசாணை 33-இல் உரிய திருத்தம் வெளியிட்டு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் கோப்பு தலைமைச் செயலகத்தில் நிலுவையில் உள்ளது. அதற்கு விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிகழ்ச்சியில் செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு, ஆரணி வட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளா்கள் கலந்து கொண்டனா். வட்டச் செயலா் மு. இளங்கோ நன்றி கூறினாா்.