திருவண்ணாமலை, ஈசான்ய மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சியை அமைச்சர் எ. வ. வேலு திறந்து வைத்து பேசியதாவது: பிப்ரவரி 14 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர்கள், சொற்பொழிவாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.
மன அழுத்தத்தை குறைப்பதற்கு புத்தகங்களை வேண்டும். புத்தகங்கள் வாசிப்பதால் நம் மனம் புத்துணர்ச்சி அடையும் என்றார். தொடர்ந்து, புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர், திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் 6 இடங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களையும், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் மாட வீதிகளில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியையும் அமைச்சர் எ. வ. வேலு தொடங்கி வைத்தார்.
அப்போது, தேரோடும் வீதிகளை இரண்டாகப் பிரித்து முதல் கட்டமாக ரூ. 17 கோடியில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. 2-ஆவது கட்டமாக ரூ. 15 கோடியில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள 97 மின் கம்பங்களை அகற்றி, புதைவு கம்பிகள் இணைக்கப்படும் என்றார். நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ், திருவண்ணாமலை எம்.பி. சி. என். அண்ணாதுரை, மாவட்ட எஸ்.பி. எம். சுதாகர் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.