திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் சுவாமிக்கும், அம்மனுக்கும் ஏற்பட்ட திருவூடல் மற்றும் மறுவூடலை பக்தர்களுக்கு விளக்கும் வகையிலான நிகழ்வு ஆண்டுதோறும் அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவூடல் நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் தனித்தனி வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நந்தி பகவானுக்கு காட்சியளித்தனர். பிறகு கோயில் ராஜகோபுரம் அருகேயுள்ள திட்டிவாசல் வழியே வெளியே வந்து சூரியபகவானுக்கு காட்சியளித்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருணாசலேஸ்வரரையும், சூரியபகவானையும் ஒருசேர தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மாட வீதிகளை 3 முறை வலம் வந்தனர். இரவு 9 மணிக்கு மாட வீதிகளில் ஒன்றான திருவூடல் வீதியில் அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் இடையே திருவூடல் உற்சவம் நடைபெற்றது. பிறகு, அருணாசலேஸ்வரர் திருமஞ்சன கோபுரத் தெருவில் உள்ள குமரக்கோயிலுக்குச் சென்று இரவு முழுவதும் தங்கினார். உண்ணாமுலையம்மன், அருணாசலேஸ்வரர் கோயிலுக்குச் சென்றுவிட்டார்.