ஜவ்வாது மலையில் பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த ஆளுநர்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலையில் உள்ள ஜவ்வாதுமலை வாழ் மக்கள் மேல்நிலைப் பள்ளி (SFRD) குனிகாந்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இப்பள்ளியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட பழங்குடியின மலைவாழ் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் 06ந் தேதி ஜவ்வாது மலையில் உள்ள ஜவ்வாதுமலை வாழ் மக்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பழங்குடியின மலைவாழ் மாணவர்களுடன் உரையாடினார். அப்போது அப் பள்ளிக்கு வகுப்பறை கட்டிடங்கள் குறைவாக உள்ளது என மாணவர்களின் உரையாடல் மூலம் அறிந்த ஆளுநர் ரவி தனது ஆளுநர் நிதியிலிருந்து அப்பள்ளிக்கு ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்குவதாக அறிவித்தார். இந்நிலையில் ஆளுநர் ஆர். என். ரவி அறிவித்த நிதியை பள்ளி நிர்வாகத்திற்கு அளித்த நிலையில் கடந்த ஆண்டு மாணவர்கள் மத்தியில் ஜவ்வாது மலை பள்ளியில் கூறிய அதே நாளான செப்டம்பர் 6 ஆம் தேதி சரியாக ஓர் ஆண்டில் ஆளுநர் கூறியது போலவே நிதி அளித்து ஜவ்வாதுமலை வாழ் மக்கள் மேல்நிலைப் பள்ளி கூடுதல் நான்கு வகுப்பறையை கட்டி மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தது குறிப்பிட்ட தக்கது.