திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடி அடுத்துள்ள காட்டுக்குளம் பகுதியில் அதிகாலையில் காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த புதுச்சேரியை சேர்ந்த சைலேஷ், சதீஷ் குமார், ஸ்டாலின், சாருஷ் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த 4 பேரின் உடல்களை நீண்ட நேரம் போராடி மீட்டனர். பின்னர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் புதுச்சேரியில் இருந்து பெங்களூரு நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் காட்டுக்குளம் வந்து கொண்டிருந்த போது தூக்க கலக்கத்தில் இருந்த ஓட்டுநர் திருவண்ணாமலையில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது தெரியவந்துள்ளது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் நண்பர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.