திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவிராயரின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று(செப்.25) குட்டைதிடல் பகுதியில் உடுமலை நாராயண கவிராயரின் மணி மண்டபத்தில் அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் கலந்து கொண்டு திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் பொள்ளாச்சி எம். பி. ஈஸ்வரசாமி , மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் உடுமலை நகர மன்ற தலைவர் மத்தின், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், உடுமலை நாராயண கவிராயர் இலக்கிய பேரவை நிர்வாகிகள் சுந்தர்ராஜ் மற்றும் அமிர்தநேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் உடுமலை நாராயண பகுத்தறிவு கவிராயர் இலக்கியப் பேரவையின் தலைவரும் நாராயண கவிராயரின் பேரனுமான சுந்தர்ராஜ் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, உடுமலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்துக்கு நாராயண கவிராயர் பேருந்து நிலையம் என பெயர் வைக்க வேண்டும், மணிமண்டபத்தில் தற்பொழுது புத்தகங்கள் பற்றாக்குறையாக இருப்பதால் புத்தகங்களை எண்ணிக்கையை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும், மேலும் மணி மண்டபம் அருகில் குடிமை பணி தேர்வுக்கு தயாராக மாணவ மாணவிகளின் வசதிக்காக அமைக்கப்பட்ட அரங்கத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார்.