உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகளில் பசுபதி வீதியும் ஒன்றாகும். இந்த வீதியில் ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள், திரையரங்கம், மளிகை மற்றும் ஜவுளிக்கடைகள், அலுவலகங்கள் அமைந்து உள்ளது. இதன் காரணமாக வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது.
ஆனால் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத பசுபதி வீதியில் அமைக்கப்பட்ட தார் சாலை போதிய பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அத்துடன் வாகனங்களும் சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விடுகிறது.
இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சாலையின் மையப் பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் தெரிவித்தும் அதை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அவசரகால உதவிகளை பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே பசுபதி வீதியில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைத்து பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்தி தருமாறு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.