தேசியப் பட்டியல் பழங்குடியினர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் மற்றும் தாட்கோ துறை இணைந்து திருப்பூர் மாவட்டத்தில் நரிக்குறவர் பழங்குடியின மக்களுக்கு மானியத்துடன் பருவக் கடன் உதவி வழங்கிய பொருளாதார முன்னேற்றம் அடையும் வகையிலான நிதி விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் தேசிய பட்டியல் பழங்குடியினர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழக முதன்மை மேலாளர் பிஷ்மிதா தாஸ், தாட்கோ மாவட்ட மேலாளர் ரஞ்சித் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் அம்மாபட்டி கிராமம், அறிவொளி நகர், ஒளிவிளக்கு நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கின்ற 195 நரிக்குறவர் மக்கள் பங்கேற்று இருந்தனர். இந்த முகாமில் கல்வி கடனுதவி, ஆதிவாசி மகிளா சசக்திகரன் யோஜனா திட்டம். சுய உதவிக்குழுக்களுக்கான நுண்கடன் திட்டங்கள், ஆதிவாசி ஷிகாரின் யோஜனா திட்டம், பழங்குடியினர் வனவாழ்வு மக்கள் மேம்பாட்டுத் திட்டம், டிரைபெட் அங்கீகரிக்கப்பட்ட பழங்குடி கைவினைஞர்களுக்கு நிதியுதவி, உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அப்போது இதில் கலந்து கொண்டிருந்த நரிக்குறவர் பழங்குடியின மக்கள் அதிகாரிகளின் ஆலோசனைகளை கேட்டவாறு தொடர்ந்து மாலை கோர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களின் பணியைப் பார்த்து வியந்த தேசிய பட்டியல் பழங்குடியினர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழக முதன்மை மேலாளர் பிஷ்மிதா தாஸ் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.