பல்லடம் அருகே காரணம்பேட்டையில் வசித்து வந்தவர் கண்ணம்மாள் (வயது 65). கண்ணம்மாள் மட்டும் காரணம்பேட்டை வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 18ம் தேதி மர்மநபர்கள் அவரை தாக்கி கை கால்களை கட்டி போட்டு பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். பின்னர் மூன்று நபர்களை கைது செய்த காவல்துறையினர் மேலும் இருவரை தேடி வந்தனர். தனிப்படை போலீசார் தூத்துக்குடி, கேரளா, பெங்களூர் ஆகிய பகுதிகளில் சிசிடிவி காட்சிகளை வைத்து முக்கிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று அம்பாசமுத்திரத்தை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 23), பாஸ்கர் (வயது 25) ஆகியோரை கேரள மாநிலம் தென்மலை பகுதியில் வைத்து கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா செய்தியாளர்களை சந்தித்தார். சம்பவம் நடந்த நான்கு நாட்களில் துரிதமாக செயல்பட்டு காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை, காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ஆகியோர் தலைமையிலான காவலர்கள் குற்றவாளிகளை நான்கு நாட்களில் கைது செய்த காவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.