திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது உப்பாறு அணை. 24 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை கடந்த 5 ஆண்டுகளாக போதிய அளவில் தண்ணீர் இல்லாமல் பெரும்பாலான நேரங்களில் வறண்டிருந்தது. இதனிடையே, உப்பாறு பகுதி விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக திருமூர்த்தி அணையில் இருந்து இந்த அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தற்போழுது 12 அடிக்கு தண்ணீர் உள்ளது.
இந்த நிலையில் இன்று நீர்வளத் துறை மூலம் முதலமைச்சரின் உத்தரவின் பேரிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உப்பாறு அணையில் உள்ள இடது, வலது கால்வாயில் தண்ணீர் திறந்து விட அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் விவசாயிகள் அணையின் கீழ்பகுதியில் உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால் தற்போழுது தண்ணீர் திறக்க வேண்டாம் என கோரி அணை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த தாசில்தார் திரவியம் மற்றும் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகளின் குறைகளை எடுத்துக் கூறியும் அதன் பிறகு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு பிப்ரவரி 3ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் உப்பாறு அணையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.