திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கருப்பண்ணவலசு ஊராட்சியில் கங்குசாமி என்ற விவசாயிக்கு சொந்தமான 30 ஆடுகள் உயிரிழந்ததை தொடர்ந்து வெறி நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழந்துள்ளதாகவும், உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மூலனூர் காவல் நிலையம் முன்பு இறந்த ஆடுகளுடன் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
சாலை மறியல் போராட்டம் மேற்கொண்ட விவசாயிகளிடம் வருவாய் துறை, உள்ளாட்சி துறை, கால்நடை துறை மற்றும் காவல் துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் இறந்து போன ஆடுகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முன்மொழிவு அனுப்பி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இழப்பீடு வழங்கும் பொருட்டு அரசாணை இரண்டு நாட்களுக்குள் பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தாசில்தார் திரவியம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததை அடுத்து விவசாயிகள் தொடர்ந்து 11 மணி நேரமாக போராடிய போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இறந்த ஆடுகளை ஆட்டோவில் ஏற்றி விவசாயத் தோட்டத்தில் புதைப்பதற்காக கண்ணீருடன் எடுத்துச் சென்றனர்.