திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் புகழ்பெற்ற துர்க்கை அம்மன் கோவில் உள்ளது இந்தக் கோவில் தற்போது புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தினந்தோறும் அங்கு சாமி தரிசனம் செய்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர்.
அப்படி இன்று துர்க்கை அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த பக்தர்கள் மத்தியில் 10 அடி நீளம் கொண்ட கருநாக பாம்பு படமெடுத்து ஆடியது. இதைப் பார்த்த பக்தர்கள் சிலர் சாமி பாம்பு என்றும், 150 வருடங்களாக இங்கு தான் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இருப்பினும் ஒரு சில பக்தர்களுக்கு பாம்பு இருந்தது அச்சுறுத்தலாகவும் இருந்தது. எனவே பாம்பை பிடித்து பத்திரமாக வேறு இடத்திற்கு விட வேண்டும் என்ற எண்ணத்தில் தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு செல்போன் மூலம் பக்தர்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன், தலைமையிலான நான்கு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்பொழுது அவர்கள் பாம்பு பிடிப்பதற்கு என்றே பிரத்திகமாக வைத்திருந்த பாம்பு பிடி சாதனத்தை பயன்படுத்தி பாம்பை லாபகரமாக பிடித்து பையில் போட்டுக் கொண்டனர். அதன் பிறகு பிடித்த பாம்பை தாராபுரத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.