திருச்சி முக்கொம்பு அருகே உள்ள கொடியாலம் காவிரி ஆறு திண்டுகரை பகுதியில் முதலை ஒன்று தண்ணீரில் சுற்றி திரிந்தது. இதனால், இந்த இடத்திற்கு குளிக்க சென்ற பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் மாவட்ட வன அலுவலர் கிருத்திகா, முதலையை பிடிக்க உத்தரவிட்டார். அதன்படி, உதவி வன பாதுகாவலர்கள் ஆகியோர் தலைமையில் வன ஊழியர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர் இராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் கொடியாலம் காவிரி ஆறு திண்டுகரை பகுதியில் சுற்றித்திரிந்த முதலையை லாவகமாக பிடித்தனர்.
பின்னர் அந்த முதலையை பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். தற்சமயம் ஆறுகளில் நீரோட்டம் குறைந்து வருவதால் ஆறு மற்றும் வாய்க்கால்களில் உள்ள முதலைகள் அடிக்கடி கரைப்பகுதிக்கு வரும். அவ்வாறு தென்பட்டால் உடனடியாக திருச்சி மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தரும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். பொதுமக்களை அச்சுறுத்திய முதலை பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.