தா. பேட்டை அருகே தடை செய்யப்பட்ட 125 கிலோ போதை புகையிலை பாக்குகள் பறிமுதல் - இருவர் கைது
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், முசிறி கூடுதல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மேற்பார்வையில், தா. பேட்டை காவல் ஆய்வாளர் அனந்த பத்மநாபன் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் கலைச்செல்வன், முத்துசாமி மற்றும் தனிப்படை காவலர்கள் கருணாகரன், பிரபாகரன் அடங்கிய போலீசார் நாமக்கல் - துறையூர் செல்லும் சாலையில் நல்லப்பநாயக்கன்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துறையூர் நோக்கி சென்ற ஆம்னி காரை நிறுத்தி சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் 111 கிலோ எடை கொண்ட 320 பண்டல் ஹான்ஸ் பாக்கெட்டுகள், 12 கிலோ எடை கொண்ட 150 பண்டல் பான் மசாலா மற்றும் 2 கிலோ 500 கிராம் எடை கொண்ட வி. ஒன் பான்மசாலா உள்ளிட்டவைகள்
கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த மதியழகன் (32), முருகேசன் (52) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் சுமார் 125 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.