
விளாத்திகுளம்: தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா!
விளாத்திகுளம் அருகே தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இராமனூர்து கிராமத்தில் சுமார் அரை நூற்றாண்டுகளாக செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக இப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வரும் இப்ராஹிம் என்பவர் நடப்பு கல்வியாண்டில் 5-ம் வகுப்பு பள்ளிப் படிப்பை முடித்து 6-ம் வகுப்பிற்கு இப்பள்ளியில் இருந்து செல்லவிருக்கும் அனுஸ்ரீ, பவித்ரா மற்றும் மருதுபாண்டியன் ஆகிய மூன்று மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் பட்டமளிப்பு விழாவைப் போன்று நிகழ்ச்சி நடத்திய சம்பவம் பெரும் பேசும் பொருளாக மாறி இப்பகுதியில் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்துவதைப் போலவே 5-ம் வகுப்பு முடித்து பட்டம் பெறும் இந்த மூன்று மாணவர்கள் மற்றும் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கும் வட்டார கல்வி அலுவலர் ஞானவேல், தலைமையாசிரியர் இப்ராஹிம் ஆகியோரும் பட்டமளிப்பு விழா அங்கி அணிந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதைத்தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் ஞானவேல் மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து பட்டங்களை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தோடு, மாணவர் சேர்க்கை அதிகரிக்க தலைமை ஆசிரியரின் இந்த செயலையும் மிகவும் பாராட்டினார்.