தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி. மு. க செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி. மு. க சார்பில் தி. மு. க தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு. க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
அதில் ஒரு நிகழ்வாக ஆண், பெண் இரு பாலாரும் பங்கேற்கும் மாநில அளவிலான மாரத்தான் போட்டி திருச்செந்தூரில் மார்ச் 2-ந் தேதி காலை 6 மணிக்கு நடக்கிறது. இந்த போட்டி திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன் தொடங்கி அதே இடத்தில் நிறைவடைய உள்ளது. ஆண்களுக்கான போட்டி 21 கிலோ மீட்டர் தூரமும், பெண்களுக்கான போட்டி 15 கிலோ மீட்டர் தூரமும் கொண்டதாக இருக்கும்.
போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம், 2-ம் பரிசாக ரூ. 75 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ. 50 ஆயிரம், 4-ம் பரிசாக ரூ. 25 ஆயிரம் மற்றும் 5 முதல் 10 இடங்களில் வரும் 6 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்த போட்டியில் பங்கேற்க விரும்புவோர் இன்று (புதன்கிழமை) முதல் தங்களது பெயரை திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.