தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குமாரகிரி பஞ்சாயத்து பகுதியில் கிராம சபை கூட்டம் இன்று தூத்துக்குடி குமாரகிரி ஊராட்சி ஒன்றிய பகுதி சேவை மையப் பகுதியில் நடைபெற்றது.
கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட அரசு அலுவலர்கள் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்காததால், தூத்துக்குடி குமாரகிரி ஊராட்சி ஒன்றிய சேவை மையத்தில் கூட்டாம்பளி விவசாய சங்க தலைவர் பட்டு முருகேசன் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக விவசாய அணி செயலாளர் வி.பி.ஆர். சுரேஷ் தலைமையில் குமாரகிரி, கூட்டாம்புளி, திருமலையாபுரம், சிறுபாடு உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தொடர்ந்து தரையில் படுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தங்கள் குமாரகிரி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமங்களான கூட்டாம்புளி, திருமலையாபுரம், சிலுவைபுரம், சிறுபாடு, சவேரியார்புரம் உள்ளிட்ட விவசாய கிராமங்களை மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என்றும், அவ்வாறு இணைத்தால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் யாரும் கையெழுத்திடாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அரசு அதிகாரிகள் எந்தவித தீர்மானத்தையும் நிறைவேற்றாமல் திரும்பிச் சென்றனர்.