கோவில்பட்டி, கழுகுமலை பகுதிகளில் ஆட்சியர் க. இளம்பகவத் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி மற்றும் கழுகுமலை பேரூராட்சிப் பகுதிகளில் அரசின் பல்வேறு துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், இன்று (15.11.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர், கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் அரசின் பல்வேறு துறைகள் மூலமாக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித்திட்டப் பணிகள் அனைத்தும் பொதுமக்களிடையே முழுமையாக சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில் துறை வாரியான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் கழுகுமலை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வாயிலாக சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாகவும் மற்றும் உள்ளூர் பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகள் மூலமாக கழுகுமலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்பட்டுவரும் குடிநீர் விநியோகப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.