கோவில்பட்டி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் ஜோதி. சரவணன் தற்பொழுது குடும்பத்தோடு சங்கரன்கோவிலில் வசித்து வருகிறார். ஜோதிக்கு மனநிலை பாதிக்கப்பட்டதால் சென்னையில் சிகிச்சை எடுத்து வருகிறார். கடந்த சில தினங்களாக ஜோதி மாத்திரை சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சங்கரன்கோவிலில் இருந்து வடக்கு திட்டங்குளம் வந்த ஜோதி அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேலே ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவருடன் போலீசார், தீயணைப்பு துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். கீழே இறங்க மறுத்துவிட்டார். மேலும் பேச சென்ற அதிகாரிகள் மீது கற்களை வீசினார்.
இதையெடுத்து சங்கரன்கோவிலில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். பெற்றோர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஜோதி கீழே இறங்கி வந்தார். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் அவருடைய பெற்றோருக்கு அறிவுறுத்தி சிகிச்சை அளிக்க நெல்லைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.