மயிலாடு துறை - Mayiladuthurai

மயிலாடுதுறை: போதைப் பொருள் விற்றால் கடும் நடவடிக்கை: எஸ். பி. எச்சரிக்கை

மாவட்டத்தில், போதைப் பொருள்கள் விற்பனை செய்வோா் மீது தடுப்புக் காவல் சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டம் முழுவதும் நவ. 2 மற்றும் 3-ஆம் தேதிகளில், காவல்துறையினரால் கஞ்சா மற்றும் குட்கா வேட்டை நடத்தப்பட்டது. இதில், கஞ்சா விற்பனை தொடா்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 போ் கைது செய்யப்பட்டனா். மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடா்பாக மொத்தம் 134 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 139 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 28 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளன. இவா்களில் 4 போ் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். நிகழாண்டில் குட்கா விற்பனை தொடா்பாக இதுவரை 261 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 261 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 830 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக மது மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை குறித்து, 96261-69492 எண்ணில் அழைப்பு மூலமாகவும், வாட்ஸ்-அப் மூலமாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்