திருவாரூர் மாவட்டத்தில் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினருடன் இணைந்து, மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவர்கள், மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசினர் கலைக்கல்லூரி மாணவர்கள் இணைந்து கணக்கெடுப்பு செய்தனர் கணக்கெடுப்பு பணியின் தொடக்கமாக திருவாரூர் மாவட்ட வன அலுவலர் எல் சி எஸ் ஸ்ரீகாந்த் தலைமையிலும், வனச்சரகர் கோமதி முன்னிலையிலும் பறவைகள் கணக்கெடுப்பு குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது. நேற்று வரை நடைபெற்ற இரண்டு நாள் கணக்கெடுப்பில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்தி முடிக்கப்பட்டது. இதற்காக வடுவூர் பறவைகள் சரணாலயம், சித்தேரி, தலையாமங்கலம், எட மேலையூர், எட கீழையூர், பொன்னாங்கண்ணி, கூப்பாச்சி கோட்டை ஆகிய ஏழு மையங்களில் இந்த கணக்கெடுப்பு குழுவினர் கணக்கெடுப்பு செய்தனர். கடந்த ஆண்டு கணக்கெடுப்பின்போது இல்லாத பறவைகளான வரித்தலை வாத்து, மஞ்சள் மூக்கு நாரை, கூழைக்கடா உள்ளிட்ட பறவைகளை இந்த ஆண்டு கணக்கெடுப்பின்போது இருப்பதை இந்த குழுவினர் உறுதி செய்தனர். இந்த கணக்கெடுப்பு பணியில் பேராசிரியர்கள் பிரபாகரன், ஜெயக்குமார், வனக்காப்பாளர்கள் வீரக்குமார், அபிராமி, ஹரி கிருஷ்ணன், பாக்கியராஜ், அருண் பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர்.