திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம், அம்மணம்பாக்கம் பகுதியில் பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு செல்லும் பேபி கால்வாய் கரையின் ஓரத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் மற்றும் ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர்.
அக்கரையை ஒட்டி பழங்குடியின ஆதி திராவிட மக்கள் வசித்து வரும் நிலையில் அதன் அருகிலேயே மாற்று இனத்தவரின் பட்டா நிலம் உள்ளதாகவும் பேபி கால்வாய் ஓரத்தில் வசிக்கும் பழங்குடியின ஆதி திராவிட மக்களை காலி செய்ய வேண்டுமெனவும் இது சென்னை குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான இடம் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அந்த நிலம் தனிநபருக்கு சொந்தமான நிலமென கூறி தாமரைப்பாக்கம் பகுதியில் இருந்து பெரியபாளையம் செல்லும் சாலையில் பேபி கால்வாயை ஒட்டி இருந்த 7 குடும்பங்கள் வேறு இடத்தில் தங்க இடம் அளிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 30 குடும்பங்களும் கடந்த 25 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலையை தீண்டாமை வேலி அமைத்து அப்பகுதி மக்கள் யாரும் வெளியேற முடியாத சூழல் அமைந்துள்ளது.
பின்புறம் உள்ள வழியில் முட்புதற்குள் ஒற்றையடி பாதை அமைத்து தங்களின் அத்தியாவசிய தேவைகள், குழந்தைகளின் பள்ளி மற்றும் அவர்களின் பிற பணிகளுக்காக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தாங்கள் பயன்படுத்தி வந்த பகுதியை வழித்தடமாக்கி தர வேண்டும் என திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.