திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் தொடர்ந்தது பெய்த கனமழை காரணமாக கடந்த 4 நாட்களாகியும் வெள்ள நீர் வடியாததால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அத்தியாவசிய பொருட்கள், பால் பொருட்கள் வாங்க முடியாமலும், நோயாளிகள், வயதானவர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். கடந்த ஆண்டு வெள்ள நீரை வெளியேற்ற தடுப்பு சுவர் அமைத்து கால்வாய் சீரமைக்கும் பணி ரூ. 50 லட்சம் மதிப்பில் நடைபெற்ற நிலையில் முறையாக தூர்வாரி கால்வாய் அகலப்படுத்தி பணிகள் நடைபெறாததால் வெள்ளநீர் செல்வதற்கு போதிய வழி இல்லாமல் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து வருகிறது.
ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் அப்பகுதியில் 5 மின் மோட்டார்களை வைத்து தொடர்ந்து வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வந்த போதிலும் 3 நாட்களை கடந்தும் தற்போதும் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ள நீர் வடியவில்லை. வெள்ள நீரில் பாம்பு, பூச்சிகள் தொல்லையால் அவதிப்படுவதாகவும், தங்களுக்கு அரசு உதவிட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.