சோழவரம் அருகே மது போதையில் தகராறில் ஈடுபட்டதால் சுத்தியலால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. மனைவியிடம் போலீஸ் விசாரணை.
செங்குன்றம் அடுத்த சோழவரம் பம்மதுகுளம் காட்டுநாயக்கன்பழங்குடிநகர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநரான கருணாகரன் (39). இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும் ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். கருணாகரன் தினந்தோறும் மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபடுவது வாடிக்கையாக நடந்துள்ளது. வழக்கம் போல கடந்த 27ஆம் தேதி கருணாகரன் மதுபோதையில் சரஸ்வதியிடம் தகராறில் ஈடுபட்டதில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த சரஸ்வதி வீட்டில் இருந்த சுத்தியலால் கருணாகரன் தலையில் ஓங்கி அடித்துள்ளார். தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த கருணாகரன் மயங்கியதை தொடர்ந்து 108அம்புலன்ஸ் மூலம் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 9நாள் சிகிச்சை பலனின்றி கருணாகரன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவனை சுத்தியால் தாக்கிய மனைவி சரஸ்வதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.