திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்டது ஆரம்பாக்கம் காவல் நிலையம். ஆந்திர மாநில எல்லோர பகுதியில் அமைந்துள்ளதால் எப்போதும் பரபரப்பாக்க காணப்படும் இந்த காவல் எல்லையில் அமைந்துள்ள ஓபசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் தெருத் தெருவாக சட்ட விரோத மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் ஓபசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென ஆரம்பாக்கம் காவல் காவல் நிலையத்தில் பூச்சி மருந்து பாட்டிலுடன் நுழைந்தனர். அப்போது தங்கள் பகுதியில் தெருத் தெருவாக மளிகை விற்பனை போல் மது விற்பனை நடைபெறுவதாகவும் இதுகுறித்து பலமுறை ஆரம்பாக்கம் காவல் நிலைய போலீசாரிடம் புகார் வழங்கியதாகவும், ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மது விற்பனையாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் பகிரங்கமாக தெரிவித்தனர்.
இது குறித்தான செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுகம் வழக்கு பதிவு செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்த சம்பவம் புகார் அளிக்க வந்த பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.