திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஆரணியாற்றில் வெள்ள பெருக்கு காரணமாக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கிய நிலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திலும், ஆந்திராவிலும் பரவலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆரணியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால் ஆரணியின் அருகே காரணி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதே போல மங்களம் கிராமத்திற்கு செல்ல ஆற்றின் குறுக்கே மக்கள் பயன்படுத்தி வந்த மண் பாதையும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. ஆற்றில் சுமார் 2அடி உயரத்திற்கு மேலாக தண்ணீர் செல்லும் நிலையில் காவல்துறையினர் இந்த தரைப்பாலத்தின் முன் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர். போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் காரணி, நெல்வாய், புதுப்பாளையம், மங்களம், எருக்குவாய் உள்ளிட்ட 10கிராமங்களில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பெரியபாளையம் வழியாக 10கிமீ சுற்றி செல்கின்றனர். பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்வோர், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்துள்ளனர்.