சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காலைமுதல் வெயில் வாட்டிய நிலையில், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனிடையே தற்போது (இரவு 8. 30 மணி) பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் அண்ணாநகர், முகப்பேர், நெற்குன்றம், கோயம்பேடு, வளசரவாக்கம், கே. கே. நகர், தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதேபோன்று புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், பூவிருந்தவல்லி, மதுரவாயல், வானகரம், திருவேற்காடு, திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப். 25) வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
மேலும், செப். 26 முதல் அக். 1 வரை 5 நாள்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தது.