ஆவடியைச் சேர்ந்த முகமது அமீன், 44 என்பவர், ஆவடி மத்திய குற்றப் பிரிவில் கடந்த மாதம் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலம் எர்ணாக்குளம் பகுதியைச் சேர்ந்த விஜய், 41, மற்றும் கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, 42, ஆகிய இருவர், சென்னை ஆழ்வார்பேட்டையில் 'அட்வைசர் அண்டு கன்சல்டிங்' என்ற பெயரில் ஏழு நாடுகளில் 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனம் நடத்தி வந்தனர்.
அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. தங்கள் நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 4 சதவீத வட்டியும், ஒரு நபரை சேர்த்து விட்டால் 10 சதவீதம் கமிஷனும் தருவதாக கூறினர். அவர்களின் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் 110 நபர்களை சேர்த்தேன். இதேபோல பல்வேறு பகுதியிலிருந்து 450க்கும் மேற்பட்ட நபர்களிடம் 65. 98 கோடி பணத்தை முதலீடு பெற்று ஏமாற்றியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். புகாரை விசாரித்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார், விஜயை நேற்று கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.